கண்களின் வழியே
கண்களின் வழியே
----------------------------------
புகுந்த வீட்டில்
முதல் நாள்
இரவு.
கிடைத்த
ஸ்பரிசத்தில்
என்னை நான்
இழந்து விட்டேன்.
விடியலில்
கிடைத்த முத்தம்
சொன்னது
' எல்லோருக்கும்
எது பிடிக்குமென்று
அறிந்து
நடந்து கொள்'.
அதற்குப் பிறகு
பல விடியல்கள்.
எல்லோருக்கும்
எது பிடிக்குமென்று
நான்
அறிந்து கொண்டேன்.
எனக்குப் பிடித்தது
எதுவென்று மட்டும்
எவரும்
கேட்கவில்லை.
இப்போது
எனக்குப் பிடித்தது
எதுவென்று
எனக்கே தெரியவில்லை.
அவளுக்குப்
பிடித்தது
எதுவென்று
கேளுங்கள்.
அப்போது தான்
அவள் உயிர் பிரியும்.
நலிந்து கிடந்த
என் உடலருகே
எவரோ சொன்னார்கள்.
அம்மா!
உனக்குப் பிடித்தது
என்னம்மா?
இறுதி மூச்சு
விலகுவதற்காக
என் மகன் கேட்டான்.
ஒரு நாளேனும்
நான் நானாக
வாழ்ந்திட நினைத்தேன்.
மனது கூற நினைத்தது
கண்ணீராக மட்டுமே
வெளி வந்தது.
கண்ணீர் அடங்கும் நேரம்
எவரோ
சொல்லிக்
கொண்டிருந்தார்கள்.
பாருங்கள்
கண்களின் வழியே
இவள் உயிர்
பிரிகிறதென்று.
- கமல நாதன்.
Comments
Post a Comment