Posts

Showing posts from April, 2021

காதல்

 காதல் ------------- காதலும் கடவுளும் ஒன்று. ஆக்கல்,  காத்தல், அழித்தல் காதலும் செய்யும்.  சிலருக்கு காதல் இதயத்தில் உறையும் வாசம். பலருக்கு  கவர்ச்சி அணியும் முகக் கவசம். வெற்றி பெற்றோர் தோற்பதும் தோற்றவர் வெல்வதும் காதலில் மட்டுமே. தோற்ற காதல் காவியமாவது போல் வென்ற காதல் பேசப்படுவதில்லை. பிரிந்தாலும் இணைந்தாலும் மறையாதது காதல். உயிரோடு கலந்து விடும் அமுதம் காதல். சில நேரங்களில் உயிர் நீக்கும் விசமுமாக. -   கமலநாதன்.

கண்களின் வழியே

 கண்களின் வழியே ---------------------------------- புகுந்த வீட்டில் முதல் நாள் இரவு. கிடைத்த ஸ்பரிசத்தில் என்னை நான் இழந்து விட்டேன். விடியலில் கிடைத்த முத்தம் சொன்னது ' எல்லோருக்கும் எது பிடிக்குமென்று அறிந்து நடந்து கொள்'. அதற்குப் பிறகு பல விடியல்கள். எல்லோருக்கும் எது பிடிக்குமென்று நான் அறிந்து கொண்டேன். எனக்குப் பிடித்தது எதுவென்று மட்டும் எவரும் கேட்கவில்லை. இப்போது எனக்குப் பிடித்தது எதுவென்று எனக்கே தெரியவில்லை. அவளுக்குப் பிடித்தது எதுவென்று கேளுங்கள். அப்போது தான் அவள் உயிர் பிரியும். நலிந்து கிடந்த என் உடலருகே எவரோ சொன்னார்கள். அம்மா! உனக்குப் பிடித்தது என்னம்மா? இறுதி மூச்சு விலகுவதற்காக என் மகன் கேட்டான். ஒரு நாளேனும் நான் நானாக வாழ்ந்திட நினைத்தேன். மனது கூற நினைத்தது கண்ணீராக மட்டுமே வெளி வந்தது. கண்ணீர் அடங்கும் நேரம் எவரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாருங்கள் கண்களின் வழியே இவள் உயிர் பிரிகிறதென்று. - கமல நாதன்.

முதுமை

முதுமை ------------------ ' உடல் கிடத்த ஓரிடம் உயிர் நீடித்திட உணவு வாழும் வரை நினைவு. என் தேவைகள் இதுவென முதுமை உணர்த்திய பாடம். வாழ்வின் தேவைகளும் இவைதானோ? தாமதமாக உணர்ந்த ஞானம்'. - கமல நாதன்.

படித்ததில் பிடித்தது

 எனக்கு  பிடித்த வரிகளை நான் அடிகோடிட்டுகொள்வது எங்கோ இருக்கும் இதை  எழுதிய எழுத்தாளருக்கு நான் இங்கிருந்தே கொடுக்கும் கைகுலுக்கல். - நா.முத்துகுமார்.